தமிழ்க்களம் உங்களை வரவேற்கிறது !!


   'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே, வாளோடு முன் தோன்றிய மூத்த குடி’, ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்த உலகத்தில் நிலை பெற்று வாழ்ந்து வரும் தமிழ் குடி.

மேற்குலகம் காடுகளில் வேட்டையாடுவதற்கு கல் எடுத்து ஆயுதம் செய்வதற்கு முயன்று வந்த காலத்தில், சங்கம் வைத்து தமிழ் வளர்த்த இனம் நம் தமிழினம்.

மொழியியல் ஆய்வு என்று துவங்கினால் அது உலகத்தின் எந்த மூலையில் பேசப்படும் மொழி என்றாலும் அதன் வேர் தமிழாக இருக்கும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

"தமிழ் தென்னிந்திய மொழிகளுக்கு தாயாகவும், வட இந்திய மொழிகளுக்கு வேராகவும் திகழ்கிறது"- தேவநேயப் பாவாணர்.

"தமிழ் இந்திய மொழிகளுக்கு தாயாகவும், உலக மொழிகளுக்கு வேராகவும் திகழ்கிறது"- மா.சோ.விக்டர்.


இந்த உலகத்தவர் எல்லாம் தத்தம் தாய்மொழியில் பேசுகின்றனர், ஆனால் நாமோ இந்த உலகத்தின் மொழிகள் அனைத்திற்கும் தாய்மொழியான நம் தாய் தமிழில் பேசுகின்றோம், என்பதைவிட பெருமைக்குரியது வேறொன்றும் இல்லை.

இத்தகைய பெருமைக்குரிய நம் தாய் தமிழின் வளர்ச்சி, கடந்த சில ஆண்டுகளாக திட்டமிட்டு தடுக்கப்பட்டு வருகிறது.

“என்று தீரும் இந்த சுதந்திர தாகம்!
என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்!!

என்ற வரிகளில் நம் பாட்டன் பாரதி, தான் எதிர்நோக்கும் சுதந்திரம் என்பது, வெறும் அரசியல் விடுதலை மட்டுமல்ல, வேற்று மொழியின் பண்பாடு, கலாச்சாரத்தில் நாம் கொண்டுள்ள மோகத்தில் இருந்து விடுபடுவது தான் என்று தெளிவுப் படுத்துகிறார். இன்றளவிலும் பாரதியின் சுதந்திர தாகம்/கனவு தீர்க்கப்படாமல் கனவாகவே உள்ளது.

“மணக்க வரும் தென்றலில் குளிரா இல்லை?
தோப்பில் நிழலா இல்லை?<
தணிப்பரிதாம் துன்பமிது!
தமிழகத்தின் தமிழ்த்தெருவில் தமிழ் தான் இல்லை”

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் மனவேதனை இன்று தமிழின பற்றாளர்கள் அனைவரையும் தொற்றிக் கொண்டுள்ளது என்பது தான் உண்மை.

எனவே “தமிழ்க்களம்” உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தமிழர் என்று பேசி ஆட்சியதிகாரத்திற்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதைவிட, தமிழர்கள் மொழிப்பற்று இழந்து, மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என்று தர்க்கம் செய்யும் நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

எனவே “தமிழ்க்களம்” உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பதை உணர்ந்து இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ், தமிழர் என்று பேசி ஆட்சியதிகாரத்திற்கு வந்த திராவிடக் கட்சிகள் தமிழ் மொழி வளர்ச்சிக்கு ஒன்றுமே செய்யவில்லை என்பதைவிட, தமிழர்கள் மொழிப்பற்று இழந்து, மொழி என்பது வெறும் கருத்து பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமே என்று தர்க்கம் செய்யும் நிலையை உருவாக்கி வைத்துள்ளனர்.

இத்தகைய சூழலில் எதிர்வரும் இளைய தலைமுறையினரிடம் மொழிப்பற்றினை வார்த்தெடுக்க, தமிழரின் அறம் சார்ந்த வாழ்வியல் நிலைக் கொள்ள, தொல்தமிழர் வரலாற்றை ஆய்ந்து, அறிந்து உலகத் தமிழர்கள் அனைவருக்கும் உரக்கச் சொல்ல, தமிழர் வாழ்வியல் வரலாற்று மீட்சிகான தளத்தை எதிர்வரும் தலைமுறைக்கு உருவாக்கி தருவதே எங்களது முதன்மையான நோக்கம்.

புதிய தொழில் நுட்பங்கள் பெருகியுள்ள இன்றைய காலச் சூழலில், தமிழறிஞர்கள் பலரும், அவர்கள் செய்துள்ள மற்றும் செய்துவரும் அரும்பெரும் தொண்டுகளும் முறையான அங்கீகாரம் பெறுவதில்லை என்பது தான் இன்றைய நிதர்சனம். ஆகவே அத்தகைய தமிழ் அறிஞர்களை தமிழர்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் அளப்பரிய பணிகளுக்கு பெருமை சேர்ப்பதும் எங்களின் நோக்கங்களில் ஒன்று.

மொழியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாக கருதப்படுவது, அனைத்து தொழில்நுட்பங்களையும் தன்னுள்ளே ஈர்த்து கொண்டு கால வளர்ச்சியோடு ஒன்றிணைந்து பயணிப்பது ஆகும். ஆனால் நம் தாய் மொழிக்கு வந்த கெட்ட வாய்ப்பாக, கடந்த சில நூற்றாண்டுகளாக உலக கண்டுபிடிப்புகள் எதுவும் தமிழுக்கு கடத்தப்படவில்லை. இதன் காரணமாக தமிழர்கள் தங்கள் பொருளாதார தேவைகளுக்காக ஆங்கில வழிக் கல்வியை நாட வேண்டிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் உச்சக்கட்டமாக தமிழ் சமூகத்தின் பெற்றோர்களும், ஆசிரியர்களும் ஆங்கிலத்தில் பேசும்படி குழந்தைகளை உந்தி தள்ளுவது.

கணிப்பொறியில் பொதுவாக நாம் எந்த மொழியில் தகவல்களை பதிவுச் செய்தாலும், அதை தனக்கான கணினி மொழியில் மாற்றி, அறிந்துக் கொண்டு, பின்னர் கட்டளைகளை செயற்படுத்தும். மீண்டும் பதிலை நமக்கான மொழியில் மொழிபெயர்த்து நமக்கு தெரியப்படுத்தும். இவ்வகையில் கணிப்பொறி கட்டமைக்க பட்டுள்ளதற்கு காரணம், இதே அடிப்படையில் தான் மனிதனின் அறிவாற்றலும் செயல்படுகிறது.

மனிதன் தான் வாசிப்பது அல்லது கேட்பது எந்த மொழியாக இருந்தாலும் முதலில் அதை தன் தாய்மொழியில் மொழிபெயர்த்து அறிந்து, உணர்ந்து பின்னர் அதற்கு ஏற்றார் போல் செயல்படுகின்றனர். மனித இயல்பு இவ்வாறு இருக்க, குழந்தைகளை ஆங்கிலத்தில் பேசும்படி வற்புறுத்துவதால் அவர்களின் சிந்தனை திறன் அழித்தொழிக்க படுகிறது.

இத்தகைய பேராபத்தை உணர்ந்து இருப்பதால் வேற்று மொழிச் சொற்கள் கலப்பு இன்றி தூய தமிழில் பேச வேண்டியதன் தேவையை தமிழர்களுக்கு உரக்கச் சொல்ல அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கான பயிற்சி களத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டுள்ளோம்.

தொழில் நுட்பங்கள் அனைத்தையும் தமிழுக்கு கடத்த வேண்டிய காலத் தேவையை இளையதலைமுறைக்கு உணர்த்திவிட்டால், அதனை செய்வதற்குரிய நல்ல அரசாங்கத்தை கட்டமைக்கும் வேலையை அவர்களே மிக எளிமையாக செய்து முடிப்பார்கள் என்ற நம்பிக்கையில், அதற்கான ஆய்வியல் அறிஞர்களை வார்த்தெடுக்கவும், அத்தகைய ஆற்றல் மிக்க குழந்தைகளுக்கு தேவையான ஊக்குவிப்பு வழங்கும் நோக்கத்துடன், மேடைபேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதை, சிறுகதை மற்றும் இலக்கியம் போன்றவற்றில் போட்டிகள் நடத்துவதற்கான தளமாக தமிழ்க்களம் செயல்ப்படும்.